search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஜிட்டல் தொழில்நுட்பம்"

    உலகளவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் இந்தியா இரண்டாவது இடம் பிடித்துள்ளது. ஆய்வு குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    உலகில் தொழில்நுட்பங்களின் ஆதிக்கம் மெல்ல நம் வாழ்வியலை மாற்ற துவங்கியிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் உலக தொழில்நுட்ப சந்தையில் வெளியான பல்வேறு சாதனங்கள் நம் பணியை சுலபமாக்கும் என்றும் நேரத்தை மிச்சம் செய்யும் என்ற போர்வையில் நம் பழக்கவழக்கங்களை அடியோடு மாற்றிவிட்டன, சில இடங்களில் மெல்ல மாற்றி வருகின்றன. 

    இந்தியாவில் விலை குறைவாக கிடைக்கும் அனைத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்திருக்கும் நிலையில், வியாபார மையங்கள் மற்றும் பெரும் நிறுவனங்களும் அறிந்து வைத்திருப்பதில் ஆச்சரியம் இருக்க முடியாது. அந்த வகையில் டிஜிட்டல் உலகில் விலை குறைவாகவோ அல்லது எளிதில் அனைவராலும் வாங்கக்கூடியதாகவும் வெளியிடப்படும் சாதனங்கள் நம் பயன்பாடுகளையும் கடந்து விற்பனையாகி வருகிறது.

    இவ்வாறு நம் தகவல் பரிமாற்றத்துக்கு அவசியமானதாக கண்டறியப்பட்ட தொலைபேசிகள், மொபைல் போன்களாகவும் பின் ஸ்மார்ட்போன், டேப்லெட் என உருவெடுத்து இன்று தகவல் பரிமாற்றத்தை கடந்து பல்வேறு பயன்களை இவை வழங்கி வருகின்றன. இந்தியாவில் மலிவு விலையில் துவங்கி அனைவருக்கும் ஏற்ற விலையில் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படுகிறது. 

    இந்நிலையில், ஸ்மார்ட்போன் பயன்பாடு குறித்த ஆய்வை சர்வதேச டிஜிட்டல் தரவு விநியோக தளமான லைம்லைட் நெட்வொர்க்ஸ் நடத்தியது. 2018-இல் டிஜிட்டல் வாழ்கைமுறையின் நிலை (The State of Digital Lifestyles - 2018) என்ற தலைப்பில் உலகம் முழுக்க நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 48% பேர் மொபைல் போன்களின் அடிமைகளாகி விட்டனர் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் கிடைத்திருக்கிறது.


    கோப்பு படம்

    உலக நாடுகளில் டிஜிட்டல் சாதனங்களுக்கு அடிமையானவர்கள் பட்டியலில் மலேசியா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் இருக்கிறது. உலகின் பத்து நாடுகளில் டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்துவோரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியா இரண்டாவது இடம் பிடித்து இருக்கிறது.

    இந்தியர்கள் அதிகம் சார்ந்து இருக்கும் டிஜிட்டல் சாதனங்களில் லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் இரண்டாவது இடம் பிடித்து இருக்கின்றது. ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 45% பேர் இந்த சாதனம் இன்றி ஒரு நாள் கூட இருக்க முடியாது என பதில் அளித்துள்ளனர். இது சர்வதேச அளவின் 33% விட 12 சதவிகிதம் அதிகம் ஆகும்.

    ஆய்வில் கலந்து கொண்ட இந்தியர்களில் 90% பேர் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் தங்களது வாழ்வில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளது. அனைத்து வித  டிஜிட்டல் தரவுகளையும் அதிகம் பயன்படுத்துவோர் பட்டியலில் உலகின் மற்ற நாடுகளை விட இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தி வருவதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இந்தியர்களில் 75% பேர் வாரத்தில் ஒருமுறையேனும் இசையை ஸ்ட்ரீம் செய்தோ அல்லது டவுன்லோடு செய்தோ பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். இதுவும் உலகின் மற்ற நாடுகளை விட அதிகம் என லைம்லைட் தெரிவித்துள்ளது. இத்துடன் திரைப்படங்களை டவுன்லோடு செய்து அவற்றை ஆஃப்லைனில் பார்ப்பதிலும் இந்தியர்கள் முதன்மையாக இருக்கின்றனர். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியர்கள் 12 சதவிகிதம் அதிகமாக திரைப்படங்களை பார்த்து வருகின்றனர்.

    புகைப்படம்: நன்றி PIXABAY
    ×